Tuesday, September 26, 2023
HomeSrilankaகதிர்காம யாத்திரிகர்களிடம் விசேட வேண்டுகோள் விடுப்பு

கதிர்காம யாத்திரிகர்களிடம் விசேட வேண்டுகோள் விடுப்பு

எத்தகைய வசதிகள் வாய்ப்புகள் இருப்பினும் தங்களை ஒறுத்து பல வேண்டுதல்களுடனும் கந்தனினதும் வள்ளியினதும் ஆசி வேண்டி கதிர்காம யாத்திரை செல்லும் யாத்திரிகர்களிடத்தில் மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்கான நண்பர்கள் குழு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது.

குறித்த வேண்டுகோளில், ஒவ்வொரு வருடமும் நாங்கள் கதிர்காமத்துக்கு நடந்து செல்லும் பாதையானது குறிப்பாக பாணம முதல் வீரச்சோலை வரை இயற்கை எங்களுக்காக வழியமைத்துத் தந்திருக்கும் பாதையாகும்.

அந்தப் பாதைகளிலும், நாங்கள் தங்கிச் செல்லும் இடங்களிலும் எங்களால் வீசி எறியப்படும் பொலித்தீன்-பிளாஸ்ரிக் குப்பைகளால் அந்தக் காடுகளும், அதில் வாழும் உயிரினங்களும், நதிகளும் பாதிக்கப்படுவது மட்டுமன்றி நிலக்கீழ் நீர் ஊடாகவும், எரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் நச்சுக் காற்று ஊடாகவும் நாங்களும் நஞ்சாகிக் கொண்டிருக்கின்றோம்.

காடும் நிலமும் நீரும் இணைந்ததே எங்கள் வாழ்வு. பறவைகளும் விலங்குகளும் பூச்சி புழுக்களும் நிறைந்ததே எங்கள் உலகு என்பதைக் கருத்திற் கொண்டு யாத்திரை செல்வோம்! கடவுளின் நினைவுடன் கடவுள் படைத்த இயற்கையை மாசாக்காது நடப்போருக்கு கடவுள் என்றும் துணை வருவார் அருள் புரிவார் என்பதை நம்புவோம்

இந்த வருடத்திலிருந்து யாத்திரை செல்லும் பாதைகளையும், நாங்கள் தங்கி நிற்கும் இடங்களையும் பிளாஸ்ரிக் – பொலித்தீனால் மாசாக்காது யாத்திரை செல்வதை எங்கள் பக்தியாகக் கொள்வோம். பாவித்துவிட்டுத் தூக்கியெறியும் பொலித்தீன் – பிளாஸ்ரிக் இல்லாது யாத்திரை செய்வது கடினமானது அல்ல.

நூற்றாண்டுகளாக யாத்திரை சென்று கொண்டிருந்த எங்கள் மூதாதையர்கள் யாரும் இவற்றைப் பாவித்ததில்லை. அவர்கள் உருவாக்கித்தந்த வழி ஊடாக யாத்திரை செல்லும் நாங்களும் பொலித்தின் – பிளாஸ்ரிக் இல்லாது யாத்திரை செல்ல முடியும்.

ஆகவே, யாத்திரைகளை ஒழுங்குபடுத்துவோர் தயவுசெய்து தங்கள் குழுக்களில் வருபவர்களுக்கு தற்காலிகப் பாவனைக்குரிய பிளாஸ்ரிக் – பொலித்தின் பைகளைக் கொண்டுவர வேண்டாம் என முன்னறிவித்தல் கொடுக்கவும். பொருட்களைக் கொண்டு செல்லத் துணிப்பைகள் உகந்தவை என்பதையும் தெரிவிக்கவும்.

பணமுள்ளோர் மீள்பாவனைக்குரிய கனமற்ற கைத்தறித் துணிகளால் பைகள் தயாரித்து யாத்திரிகர்களுக்கு விநியோகிக்கலாம்.

எங்கள் மூதாதையர் எங்களுக்காக உருவாக்கித் தந்த யாத்திரைப் பாதையில் பொலித்தின்- பிளாஸ்ரிக் பாவனையைத் தவிர்க்கப் பழகுவோமாயின் எங்கள் நாளாந்த வாழ்க்கையிலும் இது முன்னுதாரணமாக அமையும்.

அத்தோடு எங்களுக்கும், எங்கள் சந்ததியினருக்கும் நலமான வாழ்வு கிடைக்கப் பங்களித்த பயனும், அருளும் எமக்குக் கிடைக்கும். கடவுள் தந்த வாழ்க்கையை அழிக்காத வாழ்தலை எம் பக்தியாகக் கொள்வோம்.

பிளாஸ்ரிக் அற்ற யாத்திரையை முருகனுக்கும் வள்ளிக்கும் காணிக்கையாகக் கொடுப்போம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments