அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு

தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது. இதில் 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறிப்பட்டன.

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் புதைந்த நிலையில் இரண்டு நடுகற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நடுகல் கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் கூறியதாவது, “ஒரு நடுகல் வீரர் உருவம் ஒன்றும், அதில் இடது கையில் கேடயமும் வலது கையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடபுறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டி சாமி என்பவர் கீழ் வாளப்பாடி மாத விண்ணனோடு ஆநிரைகளை மீட்டு பூசலில் ஈடுபட்டு புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்துபோனதை குறிப்பிடுகிறது.

மற்றொரு நடுகல்லில் வீரன் உருவத்தில் வலது கையில் குறுவாளும் இடதுகையில் வில்லும் கொண்டு போருக்கு ஆயத்தமாகும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் இடதுபுறம் உள்ள வட்டெழுத்தில் பல்லவ மன்னன் சிங்க விஷ்ணுவின் பதினொராவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். இந்த கல்வெட்டில் வேணாட்டு புஞ்சி மல்ல நக்கன் என்பவர் புஞ்சியில் நடந்த பூசலில் ஆநிரைகளை மீட்டு அதன் பின் இறந்து போனதைக் குறிப்பிடுகிறது என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ” எனத் தெரிவித்தார்.

தென்பெண்ணையாற்றின் கரையே அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில் புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர்மக்களும் இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைந்து நிலையாக நிற்கவைக்கப்பட்டது.

தென்பெண்ணையாற்றின் கரையில் ஏற்கனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணையாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத் தடங்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வரவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Please follow and like us: