குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறும் , உணவு பாதுகாப்பற்ற நிலைமையிலுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெப்ரவரி மாதத்தில் கிடைக்கப் பெறும் வருமானத்தில் அதிக தொகையை அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பிரதேச செயலகங்கள் , மாவட்ட அதிபர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நேரடியாக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறைந்தபட்சம் ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்து , குறைந்த வருமானம் பெரும் உணவு பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ என்ற அடிப்படையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலவசமாக அரிசியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாகவே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோன்று பெப்ரவரி மாத அரச வருமானத்தில் 2022 ஏப்ரல் மாதத்தில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை கட்டம் கட்டமாக வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய மருந்து கொள்வனவிற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போசாக்கின்மையை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு, உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கவும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் சமுர்த்தி நிவாரணம் என்பவற்றை தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்காக சுகாதார அமைச்சிற்கு தேவையான நிதியை துரிதமாக வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றார்.

Please follow and like us: