Sunday, February 25, 2024
spot_img
Homeஇலங்கைசமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வந்த இளைஞர்கள்..

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வந்த இளைஞர்கள்..

நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா
மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வரும் பயணத்தில் ஈடுபட்டனர்.

சர்வமத தலைவர்களின் உயர்ந்த பட்ச ஆதரவுடன் ”ஜனநாயக இளைஞர் காங்கிரஸ்
உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள்” கண்டி தலதா மாளிகை தொடக்கம்
நல்லூர் கந்தசாமி கோயில் வரை உள்ள அனைத்து சர்வமத தலைவர்களுக்கும்
சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் என்னும் நிகழ்வானது
கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்துக்கு அருகாமையில்
ஆரம்பமானது.

சயோமோபாலிக மகா நிகாயே அஸ்கிரி மகா விகாரை பிரிவினரின் ராஜ பூஜித விங்சத்
வர்கிக காரக சங்க சபிக கலாநிதி வணக்கத்துக்குரிய கெட்டகும்பரே தம்மாராம
தேரரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

அதன்பின்னர் கண்டி கணதெவி கோயிலின் நம்பிக்கையாளர் சபை மாவில்மட இந்து
கோவிலின் குருக்கள் ஆகியோருக்கு இந்த முன்மொழிவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அடுத்து மாவில்மட ஜும்மா பள்ளிவாசல் மெளலவி உட்பட நம்பிக்கையாளர் சபையைச்
சந்திக்கச் சென்ற போது அவர்களுக்கு உயர்ந்தபட்ச வரவேற்பளிக்கப்பட்டது.
சமாதானத்தின் செய்தியைப் பாதுகாக்கத் தாம் செயற்படுவதாக உறுதியளித்த
அவர்கள் இளைஞர்களின் இந்த முயற்சி காலத்தின் தேவையாக அமைவதாகத்
தெரிவித்தார்.

உடரட்ட அமரபுர நிகாயே மல்வத்து பிரிவின் அனுநாயக்க அலவத்துகொட கொனகலகல
சிறீ சத்தானந்த மகா பிரிவெனே பிரிவேனாதிபதி வணக்கத்துக்குரிய கொனகலகல
உதித தேரர் அனைத்து மதங்களையும் சேர்ந்த இளைஞர்கள் சமாதானத்தின் செய்தியை
முன்னெடுக்க எடுக்கும் செயற்பாட்டை பாராட்டியதுடன், அடுத்த வருடம்
தேர்தல்கள் நடைபெறும் வருடமாக அமைவதால் அரசியல் இலாபங்களுக்கு இனவாதத்தை
பயன்படுத்தும் செயற்பாடுகளுக்கு இளைஞர்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என
வேண்டிக்கொண்டார்.

அதன் பின்னர் மாத்தளை கொன்கஹவெல ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை
மற்றும் மெளலவியை சந்தித்த இவர்கள், பின்னர் மாத்தளை வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த அலுவிகாரை விகாரையின் விகாராதிபதியை
சந்தித்ததுடன் அதனை தொடர்ந்து சீயம் நிகாய ரங்கிரி தம்புளு பிரிவின்
மகாநாயக்க தேரர் இனாமலுவே சிறீ சுமங்கல தேரரை சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலஹாஹெங்குனவெவ
தம்மரதன தேரரை சந்தித்த இவர்களுக்கு தேரர் நீண்ட அறிவுரைகளை வழங்கியதுடன்
இவ்வாக்கபூர்வமான செயற்பாட்டுக்கு தனது ஆசீர்வாதம் மற்றும் ஆதரவை
வழங்குவதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனுராதபுரம் அட்டமஸ்த்தான ருவன்வெலிசாயவின் விகாராதிபதி
வணக்கத்துக்குரிய  ஈத்தல்வெட்டுனவெவ ஞானதிலக்க தேரர் அவர்களைச் சந்தித்து
முன்மொழிவை வழங்கியதுடன் அதனை மேலும் விருத்தி செய்ய தேவையான முக்கியமான
ஆலோசனைகளை இதன்போது வழங்கினார்.

இன முரண்பாடுகள் மற்றும் மத பிரச்சினைகள் காரணமாக துயரம் மற்றும்
அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டல், அரசியல் கலாசாரத்தின்
ஊடாக இனவாதம் மதவாதத்தை ஒழித்தல், வர்த்தக நோக்கத்துக்காக  இனவாதம்
மற்றும் மதவாதப் பிரச்சனைகளை ஏற்படுத்தலை தடுத்தல் மற்றும் தேசிய
ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பொது தளமொன்றைக் கட்டியெழுப்பல் போன்றன
கலந்துரையாடப்பட்டதுடன், சர்வமதத் தலைவர்கள் அவர்களது பூரண ஒத்துழைப்பை
நாட்டில் எதிர்காலத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப உதவுவதாக இதன்போது
தெரிவித்தனர்.

வவுனியாவுக்கு வருகை தந்த இளைஞர்கள் நான்கு மதத் தலங்களுக்கும் சென்று
சமாதானத்தின் செய்தியைப் பரிமாறியதுடன் வவுனியா ஊடக அமையத்திற்கும்
விஜயம் செய்து தமது கருத்துக்களைப் பரிமாறினர். பின்னர் அங்கிருந்து
யாழ்ப்பாணம் சென்று பல்வேறு மதத்தலைவர்களையும் சந்தித்துடன், தமது
பயணத்தை நல்லூர் ஆலயத்தில் நிறைவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments